பதிவு செய்த நாள்
30
டிச
2022
04:12
சென்னை:தமிழகத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற 48 முதுநிலை கோவில்களில் மொபைல் போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்த சீராய்வுக் கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கோவில் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைந்து முடிக்கப்படும். அறநிலையத் துறை சார்பில், 500 திருமணங்கள் நடத்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதில், 233 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 267 திருமணங்கள், பிப்., 23ம் தேதி நடத்தப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, முதல் கட்டமாக 67 பக்தர்கள், 10 நாட்கள் பயணமாக, பிப்., 23ம் தேதி அழைத்து செல்லப்படுகின்றனர். மகா சிவராத்திரி விழா, பிப்., 18ல் சென்னை, நெல்லை, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. வரும் 30ல், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மொபைல் போன் பாதுகாப்பு பெட்டகம் துவங்க உள்ளோம். தொடர்ந்து, பிரசித்தி பெற்ற 48 முதுநிலை கோவில்களில், மொபைல் போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர்கள் திருமகள், கவிதா, ஹரிபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.