பதிவு செய்த நாள்
30
டிச
2022
04:12
போத்தனூர்: குறிச்சி அரவான் திருவிழா, 20ல் துவங்கி, முக்கிய நிகழ்வான அரவான் - பொங்கியம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து அரவான், பொங்கியம்மனுடன் பண்டாரத்தார் வீட்டில் மறைந்துகொண்டார். நேற்று காலை ஆஞ்சனேயர் இருவரையும் தேடி, குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். இறுதியில் குறிச்சியில் பண்டாரத்தாரின் வீட்டிலிருந்த இருவரையும் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து அரவானை, ஆஞ்சனேயர் தன்னுடன் அழைத்துக்கொண்டு, குறிச்சி குளக்கரை கற்பூர வினாயகர் கோவிலை சென்றடைந்தார். அங்கு சிறப்பு சீர்முறை வழிபாடு நடந்தது. குலாலர் சமூக பூஜையுடன் அரவான் அங்கிருந்து புறப்பட்டு, மந்தைவெளி மைதானம் சென்றார். அங்கு முதுப்பார் சமூக பூஜைக்கு பின் தனது கோவிலை சென்றடைந்தார். நிறைவு நாளான இன்று அரவான் திருவீதி உலா நடக்கிறது. அதுபோல் வெள்ளலூரிலும் நேற்று முன்தினம் அரவான் - பொங்கியம்மன் திருமண விழா நடந்தது. பின் இருவரும் விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று காலை சுவாமியை தேடுதல், நொய்யல் ஆற்றுக்கு அழைத்துச் செல்லுதல் நடந்தது. இரவு தேவேந்திர குல மாரியம்மன் கோவிலிலிருந்து ஆற்றுக்கு மாராட பூ மாலை அழைத்து வருதல், ஆற்றிலிருந்து புறப்படுதல், அலங்கார மேடை பூஜை, தருமராஜா கோவிலுக்கு வருதல், வானவேடிக்கை காணுதல், சுவாமி அரவான் கோவில் வந்து சேருதல், உடையார் சமூகத்திலிருந்து மண் அழைப்பு ஆகியவை நடந்தன. திரளான மக்கள் பங்கேற்றனர். இன்று நிறைவு நாள் விழா நடக்கிறது.