பதிவு செய்த நாள்
30
டிச
2022
02:12
ராசிபுரம்: ராசிபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்க, ஜனகல்யான் சார்பில், 50 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் வரும், ஜன., 2 அதிகாலை, 5:00 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு, ஜனகல்யாண் சார்பில், 32ம் ஆண்டாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக, 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி, 5 கிலோ அளவில் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை, 25 கிலோ உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில், 25 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.