பதிவு செய்த நாள்
31
டிச
2022
11:12
கோவை: கோவை, குறிச்சி அரவான் திருவிழாவை ஒட்டி மன் முகத்தால் அலங்கரிக்கப்பட்ட அரவான் சிறப்பு அலங்காரத்தில் உற்சாகமாய் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குறிச்சியில் அனைத்து சமூகத்தார் சார்பில் நடத்தப்படும் அரவான் திருவிழா கடந்த, 20ல் துவங்கியது. 28ல் .அரவான் எழுந்தருளுதல், அரவான் - பொங்கியம்மன் திருக்கல்யாணம் நடந்தன. நேற்று முன்தினம் ஆஞ்சனேயர் அரவானை தேடுதல், கற்பூர வினாயகர் கோவிலுக்கு செல்லுதல் உள்ளிட்டவை நடந்தன. நிறைவு நாளான நேற்று உடையார் சமூகத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட அரவான் மீண்டும் பண்டாரத்தார் சமூக பெரிய தனக்காரர் ராமசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அமுது படைத்தல் நடந்தது. இதையடுத்து ஊர்கவுண்டர், சேர்வை, தேவர் சமூகத்தினரின் வீட்டு பூஜை நடந்தது. தொடர்ச்சியாக ஆஞ்சனேயர் முன் செல்ல, அரவான் ஆட்டத்துடன் பொங்கியம்மாள் பின் தொடர உலா வந்தார். ஜி.கே. ஸ்கொயர், பெருமாள் கோவில். ஐயர் ஆஸ்பத்திரி பகுதிகளில் அமைக்கப்பட்ட மேடைகளில் சமூக, பொது பூஜை நடந்தது. இதையடுத்து சுந்தராபுரம் மேடைக்கு வநத அரவானுக்கு கோனார் சமூகம் சார்பில் பாலமுருகன், கவுண்டர் சமூகம் சார்பில் ஆனந்தன் ஆகியோரது வீட்டு பூஜைகள் நடந்தன. மேலும் பொது பூஜையும் நடந்தது. பின் சுந்தராபுரத்திலிருந்து புறப்பட்ட அரவானுக்கு பெருமாள் கோவிலில் கிருஷ்ணர் மாலை அணிவித்தார், இதையடுத்து கட்டுச்சோறு மேடைக்கு அரவான் சென்றார். பல்வேறு பூஜைகட்கு பின். இரவு. 11.00 மணிக்கு மேல் களப்பலி மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்ட பின் அரவான் பலி கொடுக்கப்பட்டார். கம்பம் பிடுங்கப்பட்டு, குறிச்சி குளத்தில் போடப்பட்டது. திரளானோர் விழாவை கண்டுகளித்தனர். திருவீதி ஊர்வலம் முன்னிட்டு மதியத்திற்கு மேல் குறிச்சி - சுந்தராபுரம் இடையே வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.