அன்னூர் மன்னீஸ்வரர் தேர் திருவிழாவில் சுவாமி திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 09:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் நேற்று சுவாமி திருவீதி உலா நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 23ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சூரிய வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சந்திர வாகனத்தில், தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக சென்று கோவிலை அடைந்தது. நேற்று காலையில் பூத வாகனத்தில் மன்னீஸ்வரர் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 2ம் தேதி காலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.