பதிவு செய்த நாள்
31
டிச
2022
11:12
2023 ஆங்கில புத்தாண்டு கேதுவின் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் ஜன.1ல் பிறக்கிறது. இந்த நன்னாளில் நம் வாழ்வில் நல்ல மாற்றமும், ஏற்றமும் ஏற்படவும், வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், எல்லா உயிர்களும் நலமுடன் வாழவும் பிரார்த்திப்போம்.
* சுபகிருது ஆண்டு தட்சிணாயணம் ஹேமந்த ருது மார்கழி 16 வளர்பிறை தசமி திதி, அசுவினி நட்சத்திரம், சிவநாம யோகம், மேஷ ராசி, ரிஷப நவாம்ச சந்திர அம்சம், கன்னி லக்னம், ரிஷப நவாம்சமும் கூடிய நாளில் உதயாதி நாழிகை 43.35க்கு நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இருப்பு தசை கேது 3 ஆண்டு, 6 மாதம், 21 நாட்கள்.
* லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குருவின் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும், ஐந்தாமிடத்தில் சுக்கிரன், சனி கிரகக் கூட்டணி இருப்பதும் நல்ல யோக அமைப்பாகும். இதனால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
பொது பலன்கள்: வெளிநாட்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் பெருகும். கனரகத் தொழில்கள் வளர்ச்சி பெறும். முக்கிய பதவி வகிப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவர். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நவீன ஏவுகணைகள் வாங்கப்படும். புதிய வகை விமானங்கள், போர்க்கருவிகளின் பெருக்கம் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். உலக நாடுகளின் மத்தியில் நம் நாடு முக்கியத்துவம் பெறும். மழை பொழிவால் நீர்நிலைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை அதிகரிக்கும். உணவு உற்பத்தி அதிகரிப்பால் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.