பதிவு செய்த நாள்
01
ஜன
2023
10:01
மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 2023 ஜனவரி 1-ஆம் தேதி, ஆங்கில புத்தாண்டு - கல்பதரு நாள் விழா விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணி முதல் மங்கள ஆரதி, வேத பாராயணம், விசேஷ பூஜைகள், பஜனைகள் ஆகியவை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு ஹோமம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்தச் சொற்பொழிவில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
இறைவன் திருவருளால் இப்போது ஆங்கில புத்தாண்டு - கல்பதரு நாள் துவங்குகிறது. எப்போதும் இறைவன் நினைவிலேயே இருப்பதற்கு, நாம் நம்முடைய மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். முதலில் நம்மிடமே நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், பிறகு இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் - இந்த இரண்டு பண்புகளும் நம்மிடம் கோயில்கொள்ளும்போதுதான், நாம் பெற்ற மனிதப்பிறவியைச் சரியான வகையில் பயன்படுத்தியவர்கள் ஆகிறோம். சுயநலம் தொலையும் இடத்தில்தான் தெய்விகம் பிரகாசிக்க முடியும். உலகில் சுயநலமிகள் சாமர்த்தியமாக வாழ்வதாக புறத்தளவில் தோன்றலாம். ஆனால், அவர்கள் வாழும் வாழ்க்கை முடிவில் அவர்களை நரகத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம். பிறர் பொருட்டு வாழும் தியாக வாழ்க்கை, தவறாமல் நம்மை இறைவனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். தனி மனிதர்களின் வாழ்க்கை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். “உயர்ந்த வாழ்க்கை வாழ்வதும் சாத்தியம்தான்” என்பதை, ஒரு சிலராவது தங்கள் நடைமுறை வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டும். அதுதான் சமுதாயத்திற்கு மிகுந்த நன்மையைத் தரும்.
நாம் ஊரின் நடுவில் இருக்கும் பழமரம் போலவும், ஊரின் நடுவில் இருக்கும் பொதுகிணறு போலவும், தெய்வபக்தியும் தேசபக்தியும் இணைந்த வகையில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு இறைவனிடம் மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ‘சமுதாயத்தில் மனஅமைதி இல்லாமல் பரிதவிப்பவர்கள் பலர்’ என்ற நிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாம் உன்னதமான ஆன்மிகக் கருத்துக்களின் அடிப்படையில் தெய்வத்தைச் சார்ந்து வாழ்வதாலும், சீரிய ஒழுக்கங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பதாலும்தான் உண்மையான மனஅமைதியைப் பெற முடியும். ‘மனித வாழ்க்கை நீர்க்குமிழி’ போன்று நிலையில்லாதது’ என்று பெரியவர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிறிது காலம் நாம் இந்த உலகில் வாழும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். இந்த நிலையில், அற்ப லாபங்களுக்கும் தீய உணர்ச்சிகளுக்கும் பலியாகிவிடாமல் இறைவனை வழிபட்டும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியும் அன்பு காட்டியும் நாம் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இன்றைய சமுதாயத்திற்கு கலங்கரை விளக்கம் போன்று விளங்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவருடைய வாழ்வும் வாக்கும், இன்றைய அவசர உலகில் வாழும் மக்களின் பல நூறு பிரச்னைகளைத் தீர்த்து அமைதி தரும் அருமருந்தாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
உண்மையான தெய்வபக்தி, தேசபக்தி, தியாகம், அன்பு, தொண்டு, ஒழுக்கம் ஆகிய அறப்பண்புகளை நாம் நம்முடைய வழிபாட்டுக்குரிய மகான்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ வேண்டும். நம்மைப் பல்வேறு காரணங்களால் பிடித்திருக்கும் தீய பண்புகள் தொலையவும், உயர்ந்த நல்ல பண்புகள் ஓங்கிச் செழிக்கவும், கருணைக் கடலாகிய எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் மனம் கசிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு தன் சொற்பொழிவில் கூறினார். ஆரதி, பிரார்த்தனைக்குப் பிறகு சுமார் 550 பக்தர்களுக்குப் பிரசாதமாக பகலுணவு வழங்கப்பட்டது.