பதிவு செய்த நாள்
03
ஜன
2023
02:01
சூலூர்: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியன்று, பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். சூலூர் வட்டார கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடந்தன. கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், ஸ்ரீனிவாச, கோவிந்தா என, கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பஜனை, நாம சங்கீர்த்தனத்துடன் திருவீதி உலா நடந்தது. கலங்கலில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், காங்கயம் பாளையம் பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில், கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில், அப்பநாயக்கன்பட்டி பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் வேங்கடநாத பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடப்பதால், சொர்க்க வாசல் திறக்கப்படவில்லை. உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.