பதிவு செய்த நாள்
04
ஜன
2023
07:01
சென்னை: தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைக்கும் பணிகளில் பங்கேற்க, உபயதாரர்களுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தொன்மை வாய்ந்த கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்தகைய திருப்பணிகளில் உபயதாரர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதற்கான நிர்வாக அனுமதி உடனுக்குடன் வழங்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, இதுவரை உபயதாரர்கள் வாயிலாக, 509 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,206 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. எனவே, கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள விரும்பும் உபயதாரர்கள், தங்கள் விருப்பத்தை, அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்திலோ, மண்டல இணைக் கமிஷனர் அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களிடமோதெரிவிக்கலாம். அதன்படி, உபயதாரர்கள் விரும்பும் பணிகளுக்கான மதிப்பீடு, துறை பொறியாளர்களால் தயார் செய்யப்பட்டு, ஒப்புதல் கோரப்படும். உபயதாரர்கள் ஒப்புதல் வழங்கிய பின், துறை வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்படும். துறை மேற்பார்வையோடு, உபயதாரர் விரும்பும் நிறுவனத்தின் வாயிலாக பணிகளை மேற்கொள்ளலாம். எனவே, கோவில்கள் புனரமைக்கும் பணிகளிலும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளிலும் உபயதாரர்கள் பங்கேற்று, கோவில்கள் மேம்பாட்டுக்கு துணைபுரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.