பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க அம்மன் சிலை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 07:01
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அம்மன் கோவில் பட்டி தென்பாக தெருவில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்காக புதுயுக்தியாக அம்மன் சிலை வைத்து வழிபடப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி 43 வது வார்டு அம்மன் கோவில்பட்டி தென்பாக தெருவில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வந்தது. பள்ளி செல்லும் வழியில் தெருவிலேயே குப்பைகள் கொட்டப்பட்டதால் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர். துாய்மை பணியாளர்கள் அவ்வப்போது குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வார்டு கவுன்சிலர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர் முத்துப்பாண்டி, மேற்பார்வையாளர்கள் முத்துராஜ், ஆதிலட்சுமி ஏற்பாட்டில் குப்பை கொட்டப்பட்டு வந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, அங்கே அம்மன் சிலை நிறுவப்பட்டது. அப்பகுதியினர் சுவாமியை வழிபட்டனர். சுவாமியை தினமும் வழிபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமிஷனர். கிருஷ்ணமூர்த்தி, தொடர்ச்சியாக குப்பை கொட்டப்பட்டு வந்த இடங்களில் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டது. இந்நிலையில் பொது இடங்களில் முற்றிலும் குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக சுவாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கண்டிப்பாக குப்பை கொட்ட தயங்குவர். மாநகராட்சியில் அதிகமாக குப்பை கொட்டப்படும் பொது இடங்களில் இதே போல் சுவாமி சிலை வைத்து வழிபட உள்ளது என்றார்.