மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா : சீர்வரிசையுடன் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 12:01
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மறையூர் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு திருவாதிரை விழாவையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. மாமுனிவர் அகஸ்தியர் வழிபட்ட இக்கோயில், சித்திரை மாதத்தில் சூரியனின் வெளிச்சம் நேராக கருவறைக்குள் செல்லும் சிறப்புடையதாகும். இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த காரணத்தால் கோவிலில் உள்ள நடராஜபெருமான் உற்சவமூர்த்திகள் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டது இதையடுத்து ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவாதிரை விழாவுக்காக கிராம மக்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நடராஜபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, அங்கிருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருள்களை சீர்வரிசையாக எடுத்து அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். அவகையில் இன்று நடைபெற்ற திருவாதிரை விழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து செண்டை மேளங்கள் முழங்க பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து அகஸ்தீஸ்வரர் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டதால் நடராஜர் சிலையை மீண்டும் அகஸ்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருள செய்ய கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.