காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வருகிறார். இக்கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நேற்று நிறைவு பெற்றது. நிறைவுநாளான நேற்று காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு 16 விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கோ பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பின் ராஜகோபுர தீபாராதனையுடன் சுவாமிகள் 4 மாடவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. வீதி உலா நிகழ்ச்சி முடிந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்த வாரி நடத்தப்பட்டது.பின் தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது. இதில் அம்பாள் நடராஜர் மீது கோபித்துக்கொண்டு கோவிலுக்குள் சென்று கதவை மூடிக்கொள்வது போன்றும் பின் சுந்தரமூர்த்தி சாமிகள் எழந்தருளி அம்பாளுக்கும், நடராஜருக்கும் சமாதானம் செய்து வைக்கும் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. சமாதனம் செய்வதிற்காக சாமவேதங்கள் பாடப்பட்டது பின் சுந்தரமூர்த்தி சாமிகள் சிவகாமி அம்பாளை அழைத்துக்கொண்டு நடராஜரை எதிர்கொண்டு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது நடராஜர் சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் சிங்கரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.