பதிவு செய்த நாள்
11
ஜன
2023
11:01
சென்னை : தமிழகத்தில் மேலும், 10 கோவில்களில், புதிதாக அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அன்னதான திட்டம் வாயிலாக, 764 கோவில்களில் தினமும், 85 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர், என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் சூளை சீனிவாச பெருமாள், கொரட்டூர் பாடலாத்திரிசீயாத்தம்மன், கொளத்துார் சோமநாத சுவாமி ஆகிய மூன்று கோவில்கள்; விக்கிரவாண்டி அபிராமி ஈஸ்வரர்; வேலுார் அணைக்கட்டு உத்திரரங்கநாத சுவாமி; திருச்சி பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிகருப்பணசுவாமி; கோவை வடமதுரை விருந்தீஸ்வரர், வடவள்ளி கரிவரதராஜ பெருமாள்; ஈரோடு, மொடக்குறிச்சி அனுமனீஸ்வரர்; தென்காசி கடையம் பத்ரகாளியம்மன் ஆகிய, 10 கோவில்களில், நேற்று அன்னதான திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. சென்னை கொளத்துார் சோமநாத சுவாமி கோவிலில், அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தபின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழகத்தில், 754 கோவில்களில் மதிய வேளை அன்னதானமும், அவற்றில் எட்டு கோவில்களில் நாள் முழுதும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 10 கோவில்களின் அன்னதான திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 764 கோவில்களில் தினசரி, 85 ஆயிரம் பக்தர்கள் பயனடைவர். எங்கெல்லாம் பக்தர்கள் பயன்பெறுவர் என்பதை கருத்தில் வைத்து, இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், திருவிழா காலங்களில், 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தினசரி, 10 ஆயிரம் பேர் வீதம், 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.