மகர சங்கராந்தியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2023 06:01
கோல்கட்டா,- மேற்கு வங்கத்தின் சாகர் தீவில், மகர சங்கராந்தியை முன்னிட்டு குவிந்த 30 லட்சத்துக்கும் அதிகமானோர், அங்கு கங்கையும், கடலும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினர்.
மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில், மகர சங்கராந்தியை முன்னிட்டு, கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இங்கு புனித நீராடுவதற்கான நேரம் நேற்று மாலை தான் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இங்குள்ள ஹூக்ளி நதி மற்றும் வங்க கடல் சங்கமிக்கும் பகுதியில் ஏராளமானோர் அதிகாலை முதலே புனித நீராடினர். அடர் பனி மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் நீராடியவர்கள், ஆடல், பாடலுடன் கபில் முனி ஆசிரமத்தில் வழிபட்டனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்துள்ளதால், மேற்கு வங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் மற்றும் 25 ட்ரோன்கள் வாயிலாக கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சங்கமப் பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் தங்க, சாகர் தீவில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.