பதிவு செய்த நாள்
17
ஜன
2023
03:01
மூலம்: சனிபகவான் உங்களின் ஐந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குரு - கேது கிரக அமைப்பில் பிறந்தவர்களான உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.
திட சிந்தனைகளுடன் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பலவழிகள் உதயமாகும். நிதி நெருக்கடி ஏற்படாது. குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். சிலர் மேலிடத்துத் தொடர்புகள் கிடைக்கப் பெறுவர். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கி முன்னேறுவீர்கள். அதே சமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மை காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவிய மனக் கஷ்டம் தீர்ந்து, குடும்பத்தில் குதுாகலம் நிறையும். நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதே சமயம் உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில சமயம் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது ஏற்படாது. வாகனங்களுக்கு அடிக்கடி பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் வீண் விஷயங்களைப் பேச, செய்ய துாண்டலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர், நண்பர்களுடன் அடிக்கடி உரையாடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பணியாளர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் திக்குமுக்காடிப் போவீர்கள்.
வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் கற்பனை சக்தி ஊற்று போல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும்.
பெண்களுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாக கிடைக்கும். ஆன்மிகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் உழைப்பிற்கேற்ப மதிப்பெண்கள் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு
+ உயர்பதவி கிடைக்கும்
- திடீர் செலவு உண்டாகும்
பூராடம்: சனி பகவான் உங்களின் நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குரு - சுக்ரன் இணைப்பில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லை ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் அறிவுரை கூறும்படி நடந்து கொள்ள மாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்டதுாரப் பயணங்களால் நன்மை உண்டாகும்.
கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. உடலில் இருந்த சோர்வு மறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். தாயார் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து சுமுகஉறவு உண்டாகும்.
உறவினர்களிடம் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உற்சாகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ சந்தர்ப்பம் அமையும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டுவது நன்மை தரும். தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர் விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். அதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லை கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பர். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு செய்வது அவசியம்.
வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கும். வெளியில் கொடுத்திருந்த பணம் வந்து சேருவதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணி ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பெண்கள் கணவரின் பாராட்டுகளை அடைவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உடல் நலத்தில் மட்டும் கவனம் தேவை.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்குவர். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். சக மாணவர்களுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: துர்கை வழிபாடு
+ பயணங்களால் நன்மை
- வீண் சண்டை சச்சரவு
உத்திராடம்: சனி பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மையும், சாதிக்கும் மனப்பான்மையும் ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
உங்களை எதிலும் நிதானமாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் சிரமமில்லாமல் கை வந்து சேரும். கோயில் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும். சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் ‘குற்றமற்றவர்’ என நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள். அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வியில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விரும்பும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.
பணியாளர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்பு அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் சுய கவுரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்கள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனையால் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பர்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
+ சாதிக்கும் மனப்பான்மை
- எதிலும் நிதானம் தேவை