பதிவு செய்த நாள்
17
ஜன
2023
05:01
திருவண்ணாமலை: மனிதனின் இல்லற வாழ்வில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் காட்சி தர வேண்டி, பிருங்கி மகரிஷி, அருணாசலேஸ்வரரை மட்டும் நினைத்து தவமிருந்த நிலையில், அவருக்கு காட்சி தர அருணாசலேஸ்வரர் செல்ல, இதை பராசக்தி அம்மன் தடுக்க, அதையும் மீறி அருணாசலேஸ்வரர் சென்றார். இதனால் பராசக்தி அம்மன், அருணாசலேஸ்வரர் இருவரிடையே திருவூடல் ஏற்படும். இருவரையும் சமாதானம் செய்ய சுந்தரமூர்த்தி நாயனார் ஈடுபட்டு, முயற்சி தோல்வியடைந்து, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க அருணாசலேஸ்வரர் செல்வார். செல்லும் வழியில் குமரக்கோவிலில் தங்குவார். அப்போது வழியில் கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்து விடுவார். பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்ததால் தான், நகையை பறிகொடுத்ததாக, பராசக்தி, அருணாசலேஸ்வரரிடம் கூறுவார். பின் இருவரும் சமாதானமாகி, மறுவூடல் நடக்கும். சுவாமி நகை பறிகொடுத்ததை அறிந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மனை சேர்த்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை, நினைவு கூறும் வகையில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில் ஆண்டுதோறும், திருவூடல் விழா, மறுநாள் மறுவூடல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று திருவூடல் திருவிழா நடைபெற்றது. இன்றிரவு குமரக்கோவிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை காணும் தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.