பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
கூடலூர்: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானகள் பங்கேற்ற பொங்கல் விழாவும், பழங்குடியினர் இசை, நடன நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரணம் யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று, மாலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரிக்கப்பட்டன். தொடர்ந்து, வழக்கம் போல் அங்குள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் பூஜைகளில், வளர்ப்பு யானைகள் பங்கேற்று மணி அடித்து கோவிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், முதல் முறையாக, முகாம் வளகத்தில், வளர்ப்பு யானைகள் பொம்மி, சந்தோஷ், காமாச்சி, பாமா, கிருஷ்னா ஆகியவை அணி வகுத்து நிற்க, ஐந்து பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து யானைகளுக்கு, கலெக்டர் அம்ரீத், முதுமலை கள இயக்குனா வெங்கடேஷ், எஸ்.பி., பிராபகர், முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருள் ஆகியோர் பொங்கல் கரும்பு வழங்கினர். விழாவில், பழங்குடியினருடன் எஸ்.பி., பிராபகர், முதுமலை துணை இயக்குனர வித்யா நடனம் ஆடினர். விழாவில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். அங்குள்ள விநாயகர் கோவில் பூஜை மட்டும் நடந்தது.