பதிவு செய்த நாள்
23
ஜன
2023
08:01
பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேக பூஜையில் இன்று வேள்விச்சாலை பூஜைகள் துவக்கம். மூலவர் அருள் சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் நடைபெறும்.
பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26,27,ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூஜைகள் ஜன.18ல் துவங்கின. நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து திருக்கோயில் அர்ச்சகர் ஸ்தானிகர்கள் தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. மாலை அரசமர வழிபாடு நிலமகள் வழிபாடு, பூமி வழிபாடு, புனிதமண் வழிபாடு, ஏழு கடல், நெல்மணி, நிறைகுடம், மண் எடுக்கும் கருவி திருவொளி வழிபாடுகள் நடைபெற்றது. இன்று (ஜன.23) காலை 6:00 மணிக்கு பாத விநாயகர் கோயில் முதல் உட்பிரகார தெய்வங்கள் அருட்சக்தியை அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் ஆதவன் ஒளியிலிருந்து நெருப்பு எடுத்து வேள்விச் சாலைக்கு தீயிடல் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு வேள்விச்சாலை தூய்மை உழைப்பாளிகை இறை வழிபாடு நடைபெறும். மாலை 6:30 மணிக்கு கருவறை இறைகுடங்கள் அலங்கரித்தல் நடைபெறும்.
ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி, தெய்வயானை, சண்முகர், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர், கோயிலின் தங்கம்,வெள்ளி, தாமிர, பித்தளை குடங்களை அலங்கரித்து கருவறை அருட்சத்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் நடைபெறும். இதில் கருவறையிலிருந்து வேள்விச்சாலைக்கு திருக்குடங்களை அலங்கார மேடையில் எழுந்தருள செய்தல் நடைபெறும். அதன்பின் முதற்க்கால வேள்வி துவங்கும். இன்று மாலை முதல் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன. 27, வரை நவபாஷாண மூலவர் சிலை தரிசனம் நடைபெறாது. வேள்விச்சாலையில் சுவாமி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இரவு 10:00 மணிக்கு மேல் நிறைவேள்வி நடைபெறும். தமிழில் திருமறை சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறைகள், கந்தர் அலங்காரம், ஆகியவற்றை 15 ஓதுவார்கள் உடன் திருக்கோயில் ஓதுவாமூர்த்திகள் இசைப்பர். நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெறும். பழநி கோயில் நாள்தோறும் அன்னதானத் திட்டம் இன்று (ஜன.23) முதல் ஜன.27 வரை திருவீதி குடமுழுக்கு நினைவரங்கத்தில் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.