பதிவு செய்த நாள்
23
ஜன
2023
08:01
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், சேவூர் அடுத்த ஆலத்தூரில் மேலத் திருப்பதி என போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெற உள்ளது.
மேலத்திருப்பதி என்னும் சிறப்பு பெயர் பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை வரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக வெள்ளியன்று வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் தொடங்கி 28ம் தேதி பெருமாளுக்கு காப்பு கட்டுதல், கருடாழ்வார் திருமஞ்சனம், கொடியேற்றம், திருவீதி புறப்பாடு உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி முதல், 2ம் தேதி வரை பெருமாள் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், புஷ்பக விமான வாகனம், யானை வாகனம் உள்ளிட்டவைகளில் திருவீதி புறப்பாடுநடைபெற உள்ளது. அதனையடுத்து 3ம் தேதி வெள்ளியன்று காலை பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதல் நடைபெற்று 11 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், 4ம் தேதி சனிக்கிழமை பரிவேட்டை குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடும், 6ம் தேதி திங்கட்கிழமை மஹா திருமஞ்சனம், மஹாதரிசனம், கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதலுடன் மஹா தீபாரதனையுடன் விழா நிறைவடைகின்றது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ,செயல் அலுவலர் சங்கரசுந்தரேஷ்வரன்,பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.