தை அமாவாசை வராக நதி, மஞ்சளாற்றில் நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2023 09:01
பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி, தேவதானப்பட்டி மஞ்சளாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி இருபுறம் கரைகளில் ஆண், பெண் மருத மரங்கள் உள்ளது. இந்த இரு மரங்களின் நிழலின் நடுவே வராக நதியில் குளித்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை காலங்களில் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் குளித்துவிட்டு பாலசுப்ரமணியரை வணங்கி செல்வர். நேற்று தை அமாவாசையில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் வராகநதியில் குவிந்தனர். பாலசுப்பிரமணியர் கோவிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. குருவப்ப பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் சுப்பிரமணியன் செய்திருந்தார். வீச்சு கருப்பணசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயிலில் மஞ்சளாற்றில் அதிகஅளவில் குளித்த பக்தர்கள் காமாட்சி அம்மனை வணங்கி சென்றனர். குலதெய்வம் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.