பதிவு செய்த நாள்
23
ஜன
2023
09:01
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு வார விடுமுறை, கோயில் கும்பாபிஷேகத்தால் மூலஸ்தான கருவறையில் சுவாமி தரிசனம் செய்ய இயலாத காரணத்தால் பக்தர்கள் வருகை அதிகரித்தது.
பழநியில் மலைக் கோயிலுக்கு வார விடுமுறை மற்றும் இன்று கும்பாபிஷேக வேள்விச்சாலை பூஜை துவக்கத்திற்கு பின் மூலஸ்தான கருவறையில் கும்பாபிஷேகம் முடியும் வரை சுவாமி தரிசனம் செய்ய இயலாத காரணத்தால் வெளியூர், வெளி மாநில பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர். மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். பழநி, தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. பழநி, சன்னதி வீதி, கிரிவீதியில் ஆக்கிரமிப்பு கடைகள் இல்லாததால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கிரிவலம் வந்தனர். அலகு குத்தி வந்தவர்கள் காவடி எடுத்து வந்தவர்கள் சிரமமின்றி கிரிவலம் வந்தனர். சில இடங்களில் தட்டு கடைகள் மட்டும் செயல்பட்டன. எனவே அதிகாரிகள் தொடர்ந்து கிரி வீதியில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.