பதிவு செய்த நாள்
23
ஜன
2023
10:01
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திருத்தலங்களில் 11 திவ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் நாங்கூரில் தை மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் 11 தங்க கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு 11 தங்க கருடவ சேவை உற்சவம் நடைபெற்றது. திருநகரி கோயிலில் இருந்து புறப்பட்ட திருமங்கையாழ்வார் 11 கோயில்களுக்கும் சென்று கருட சேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைக்கும் நிகழ்ச்சியும், அவரது அழைப்பை ஏற்று மணிமாட கோயில் என்று அழைக்கப்படும் நாங்கூர் கோயிலில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன், வரதராஜன், வைகுந்த நாதன், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி, கோபாலன் ஆகிய 11 பெருமார்களும், புருஷோத்தமன் கோயிலில் இருந்து மணவாள மாமுனிகளும் மணிமாட கோயிலுக்கு எழுந்தருள திருமங்கை ஆழ்வார் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தங்க கருட வாகனத்தில் 11 பெருமாள்கள், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. கருட சேவையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க கருட சேவையை கண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர். உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கருட சேவை கமிட்டியினர் செய்திருந்தனர். மயிலாடுதுறை எஸ்பி. நிஷா தலைமையில் 425-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
போலீஸ் மெத்தனம்- பக்தர்கள் அவதி: நாங்கூர் கருட சேவைக்கு ஆண்டுதோறும் 100 போலீஸ் மட்டுமே பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் எந்தவித சிரமமும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இவ்வாண்டு எஸ்பி. தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
சுவாமி புறப்பட்டு தாமதம்: கருட சேவை நடைபெறும் 11 பெருமாள் கோவில்களின் சிற்பந்திகளை மணிமாட கோவிலின் உள்ளே அனுமதிக்காததால் சுவாமி புறப்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகிகளும், போலீசாரும் சிப்பந்திகளை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். சிப்பந்திகளின் சிரமத்திற்கு எஸ்பி, நிஷா வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு தாமதமாக சுவாமி புறப்பாடு நடைபெற்றது.