பதிவு செய்த நாள்
24
ஜன
2023
10:01
ஆர்.கே.பேட்டை: பொங்கல் பண்டிகைக்கு பின், நேற்று அதிகாலை விநாயகர் பூஜையுடன் நெசவாளர்கள் புதிய தொழில் ஆண்டில் தொழிலை துவங்கினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கைத்தறி மற்றும் விசைத்தறிகளில், சேலை, வேட்டி, லுங்கி, சுடிதார் உள்ளிட்ட ரகங்களை தயாரித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை தொழில் ஆண்டின் துவக்கமாக கொண்டு நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர். போகி பண்டிகையுடன் தறிக்கூடங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நெசவாளர்கள், நல்ல நாள் பார்த்து பூஜையுடன் தொழிலை துவங்குவது வழக்கம். அதன்படி பொதட்டூர்பேட்டையில் நேற்று அதிகாலையில் தறிக்கூடங்களில் சிறப்பு பூஜை நடத்தினர். அதை தொடர்ந்து கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.