பதிவு செய்த நாள்
26
ஜன
2023
10:01
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மடவிளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சைவம் வைணவம் இணைந்த திருத்தலமாக விளங்குகிறது.
இக்கோவிலின் சிறப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அது போல, இங்குள்ள வற்றாத தெப்பத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கலயத்தில் விபூதி வரும் அறிய நிகழ்வும் நடந்து வருவது அதிசயமான ஒன்றாகும். இந்த கோயில்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த 22ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 23ம் தேதியன்று மங்கள இசையுடன், விகேஸ்வர பூஜை, முளைப்பாரி அழைத்து வரும் நிகழ்வும், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இத்திருகோயில்களில் தரிசனம் செய்ய பெங்களூரு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர் மூலம் காங்கேயத்துக்கு வருகை தந்தார். பின்னர் கார் மூலம் கோவிலுக்கு வந்த அவரை அவிநாசி வேத ஆகம பாடசாலை முதல்வர் சுந்தர மூர்த்தி சிவாச்சாரியார் வரவேற்றார்.
தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இரண்டாம் யாக சாலை பூஜைகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவருக்கு சிவன்மலை சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்களில் அவர் சாமி தரிசனம் செய்தார். ரவிசங்கர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நாளை ஆறாம் கால யாக சாலை பூஜையும் மகா தீபாராதனையும், காலை 8:15 மணிக்கு யாத்ரா தானம் கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வருதல், 9:00 மணிமுதல் 10:30 மணிக்குள் சிவாலய பரிவார விமான கோபுரங்களுக்கும் மூலஸ்தானத் துக்கும், பெருமாள் கோவில் பரிவார மூலஸ்தானத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது. மதியம் 12.15 மணிமுதல் 1.15 மணிவரை மகா அபிஷேகம், தீபாராதனை, பிரதாசம் வழங்கப்படுகிறது.
மாலை 5.00 மணிமுதல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும். இதில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிவ ஸ்ரீ சுப்பிரமண்ய சிவாச்சாரியர், ஜமீன் சமத்தூர், சிவ ஸ்ரீ சுப்பிரமண்ய சிவாச்சியர், திருச்சி திருவெள்ளரை பெரிய கோயில் மிராஸ் பட்டர் பாஞ்சராத்ர ஆகமரத்தினம் கோபாலகிருஷ்ணபட்டர், வீரசோழபுரம் பார்பதி பெரியமடம் ஒரு நான்கு வேதாந்த பண்டித குரு ஸ்வாமிகள், மடவளாகம் பார்பதி மடம் ஆதினம் ஆருத்ர கபாலீஸ்வர குரு சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயில் ஸ்தானீகர் சிவ ஸ்ரீ சிவசுந்தர சந்தோஷ்சிவம் யாகசாலை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பிள்ளையார்பட்டி சிவநெறி கழக நிறுவனர் விகாஸ் ரத்னா சிவ ஸ்ரீ பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய முதல்வர் சிவஸ்ரீ ராஐாபட்டர், சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முகசிவாச்சாரியார், இருகூர் நாகேஸ்வர சிவாச்சாரியார், ஜமீன் சமத்தூர், திருநாவுக்கரசு சிவாச்சாரியார், கோவை சிவக்குமார் சிவாச்சாரியார், ஐயர்மலை இரத்தினகுமார ஈசான சிவாச்சாரியார், கொடுமுடி சிவாகமவித்யாநிதி பிரகாஷ் சிவம் ஆகிய சிவாச்சாரியார்களும், மடவிளாகம் ராஜா பழனிசாமி குருக்கள், மணிரத்தின குருக்கள், ரங்கநாதன் பட்டர், சிவசேனாபதி பட்டர் அருண்பிரகாஷ்சிவம், வீரசோழபுரம் சரவணசிவம் ஆகிய ஸ்தானீகர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நேற்றைய நிகழ்சியில் காங்கேயம் சுற்று வட்டார ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் என பல ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டர்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.