பதிவு செய்த நாள்
26
ஜன
2023
10:01
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை, கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் நிதியில் இருந்து, கல்லுாரிகள் துவக்கவும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்களை சமர்ப்பித்து வாதாடியதாவது: கோவில் நிதியில், அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர், ஆய்வாளர்கள் அலுவலகங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினி மயமாக்கவும், பஸ் நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோவில்களை நிர்வகிக்க, நிர்வாக கட்டணமாக மொத்த வருமானத்தில், 12 சதவீதம் வழங்கப்படும். இருப்பினும், எந்தவித தயக்கமும் இல்லாமல், கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு, அரசு நிதி போல பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, சிறப்பு தணிக்கை செய்தால், அனைத்து விஷயங்களும் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து, கோவில் நிதியை தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் செலவழிக்க வேண்டும்; கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது. கண்காணிப்பு என்ற பெயரில், கோவில் வளங்களை எடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை பிப்., 8க்கு தள்ளி வைத்தனர்.