பதிவு செய்த நாள்
27
ஜன
2023
10:01
நத்தம், நத்தம் அருகே கருத்தாக்கம் பட்டியில் உள்ள முத்தாலம்மன், காளியம்மன், வெற்றி விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி ஜன.25 விநாயகர் பூஜை, பூர்ணாகுதி, முதல் கால யாகசாலை பூஜைகள் வாஸ்து ஸாந்தி, மருத்சங்கிரணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், ஜெபபாராயணம், சுவாமிகளுக்கு எண்வகை மருந்து சாத்துதல், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது . தொடர்ந்து நேற்று புண்ணியாஹவாசனம்,பிம்மசுத்தி, நாடி சந்தானம், பிம்பரக்ஷ்க்ஷாபந்தனம், ஸபர்ஸாஹீதி, செளபாக்யத்ரவ்யாஹுதி, வாசனைப், சதுர்த்வார பூஜை , வேதிகா அர்ச்சனை, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனிதஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பங்களில் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.