எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2023 10:01
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்திற்கு பின் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நாகை மாவட்டம் எட்டுக்குடியில், வன்மீக சித்தர் வழிபட்டதும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள்,கடந்த 20 ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவிலில் உள்ள இடும்பன், கடம்பன்,விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தீபாரதனைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை 4 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 8 மணிக்கு கடங்கள் புறப்பாடுக்கு பின், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பின் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.