அன்னூர்: அன்னூர் அருகே பழமையான பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது.
அன்னூர் அருகே சாளையூரில் 2000 ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்தர்கள் மற்றும் முனிவர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இக்கோவில் வளாகத்தில் எந்த காலத்திலும் வற்றாத சுனை உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் கருங்கற்களால் கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம், சித்தர்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி, தரைத்தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி காலை முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்குகிறது. மாலையில் திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. வரும் 30ம் தேதி காலையில் விமான கலசங்கள் நிறுவுதலும், இரவு 108 மூலிகை பொருட்களை வேள்வி குண்டத்தில் சமர்ப்பித்தலும் நடக்கிறது. 31ம் தேதி காலையில் பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதலும், இரவு பழனியாண்டவருக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. வரும் பிப். 1ம் தேதி காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், காலை 9:45 மணிக்கு விமான கலசங்கள் மற்றும் பழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், அவிநாசி சித்தர் பீடம் சின்னசாமி சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர். தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.