பதிவு செய்த நாள்
28
ஜன
2023
11:01
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோவில் அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது.
பின்னர் , காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, 7:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தன. இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. விழாவில், கோவில்பட்டி எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ, கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, முன்னாள் மாவட்ட பஞ்., தலைவர் சத்யா, அதிமுக., துக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, கவுன்சிலர் விஜயகுமார், மண்டகப்படிதாரர் வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.