பதிவு செய்த நாள்
28
ஜன
2023
10:01
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிப்.1ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நேற்று கோபுரங்களில் மரம், பலகை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சார கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆர்.வைக்கம்நிதி ஆய்வு செய்தார்.
இக்கோயிலில் கடந்த 2006 முன்பு வரை பெருமாள், சவுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், விஷ்வசேனர் சன்னதிகள் மட்டும் இருந்தன. 2006 கும்பாபிஷேகத்தின் போது சக்கரத்தாழ்வார், பக்தஆஞ்சநேயர், லட்சுமிநரசிம்மர், ஸ்ரீஆண்டாள் சன்னதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. தற்போதைய கும்பாபிஷேக திருப்பணியில் கூடுதல் சிறப்பம்சமாக பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக சன்னதி கோபுரங்களில் கட்டப்பட்டிருக்கும் மரம், பலகைகளிலான கட்டமைப்புகளை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆர்.வைக்கம் நிதி ஆய்வு செய்தார். பாதுகாப்பை அதிகரிக்க சில இடங்களில் கூடுதலாக மரக்குச்சிகளை கட்ட அறிவுறுத்தினார். செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, திருப்பணி பொறுப்பாளர்கள் பத்மநாபன், முரளிராஜன் உடனிருந்தனர்.