கோவில்பாளையம்: வெள்ளானைப்பட்டி அருகே காரணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வெள்ளானைப்பட்டி ஊராட்சி, காரணப்பெருமாள் நகரில் உள்ள காரணப்பெருமாள் கோவிலில் புதிதாக விமான கோபுரம் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. இரவு முதற்கால யாக பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 9:00 மணிக்கு காரண பெருமாளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது. இதையடுத்து மகாபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.