பதிவு செய்த நாள்
01
பிப்
2023
10:02
திருப்பூர்;திருப்பூர்
மாவட்டத்தில் உள்ள, முருகன் ஸ்தலங்களில் தைப்பூச தேர்த்திருவிழா,
கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. முருக பக்தர்களின் பக்தி முழக்கத்துடன்,
தினமும் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஊத்துக்குளி,
கதித்தமலை ஸ்ரீவெற்றி வேலாயுதசாமி கோவிலில், தமிழகத்தில் வேறு எங்கும்
இல்லாத வகையில், மலையின் மீது தேரோட்டம் நடக்கிறது. இந்தாண்டு
தேர்த்திருவிழா, 27ம் தேதி கிராமசாந்தி மற்றும் 28ம் தேதி கொடியேற்றத்துடன்
துவங்கியுள்ளது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து, சுவாமி தேரோட்டம், வரும் 5ம்
தேதி நடைபெறுகிறது. மலைக்கோவில்ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச
விழா, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் பிப்., 2ம் தேதி வரை,
தினமும் காலை மற்றும் மாலை சுவாமி கிரிவலம் நடைபெறும். வரும் 3ம் தேதி,
மயில் வாகன காட்சி, வரும், 4ம் தேதி ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும்
நடைபெறும். வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி,
ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளி, மாலை 3:00
மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து,6ம் தேதி பரிவேட்டை, தெப்போற்சவம்,
குதிரை வாகன பவனியும், 7ம் தேதி மகா தரிசனம், அன்னதான நிழ்ச்சியும், 8ம்
தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது. பொங்கலுார் அருகே அலகுமலை
ஸ்ரீமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா,
கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தினமும், காலை, மாலை சிறப்பு அபிேஷகம்
மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. வரும் 3ம் தேதி பஞ்சமூர்த்திகள்
புறப்பாடு, 4ம் தேதி திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, 5ம் தேதி காலை,
6:00மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து,
மதியம் 1:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. அதன்பின், பரிவேட்டை,
சுவாமி திருவீதியுலா, தரிசனம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.