பதிவு செய்த நாள்
01
பிப்
2023
10:02
கோவை: பழநி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளை மீறியுள்ளதாக தி.மு.க., அரசுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவில், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசார் தங்களால் முடிந்த அளவுக்கு விதிகளை மீறி, சொந்த வீட்டு விசேஷம் போல நடத்தினர். இது, பக்தர்களுக்கு வேதனையை தந்துள்ளது. ஏழு கால பூஜையின்போது மந்திர கோஷங்கள் மலையை தவிர கீழே இருப்பவர்களுக்கு கேட்காத வகையில் ஒலிபெருக்கிகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் அதிகளவில் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக ஒலிபெருக்கிகள் துண்டிக்கப்பட்டன. தமிழகத்தின் முக்கியமான கோவிலில் வேதமந்திரங்கள் முழங்கவில்லை.
தமிழில் கூட சரியான மந்திரங்கள் முழங்காத அளவுக்கு பார்த்துக் கொண்டனர். தி.மு.க., அரசு, ஹிந்து மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் பொய்யாக்க நினைப்பதே இதற்கு காரணம். கருவறைக்குள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் சுமார், 400 நபர்கள் சென்று மூலவரை காட்சிப்பொருளாக பார்க்க அனுமதிக்கப்பட்டனர். கருவறைக்குள் பெண்கள் போகக் கூடாது. ஆனால், அமைச்சர் சக்கரபாணியின் மனைவி மற்றும் பல பெண்கள் கருவறைக்குள் சென்று வந்தனர்; இது மிகப்பெரிய ஆகம விதிமீறல். இது, தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து விளைவிக்கும்.
கோவிலில் நடந்த ஆகம விதிமீறலால், தமிழக மக்களுக்கும் தீங்கு விளையக்கூடிய சம்பவங்களை திராவிட மாடல் அரசு செய்துள்ளது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொது மக்கள், உள்ளூர் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணமுடியவில்லை. பழநி போகர் பூஜை செய்யக்கூடிய புலிப்பாணி வாரிசான, புலிப்பாணி பாத்திர சுவாமிகளை முறையாக அழைத்து கும்பாபிஷேகம் நடக்கவில்லை. பல ஆதீனங்களையும் கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கவில்லை. மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆகம விதிமீறலுக்கு அங்கு பணிபுரியும் ஆச்சாரியார்கள், தலைமை குருக்கள் ஆளும் கட்சிக்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.