பாரம்பரியமிக்க வைரவேலுடன் நத்தம் வந்த நகரத்தார் காவடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 10:02
நத்தம் : நத்தம் வாணியர் காவடி மடத்திற்கு 400 ஆண்டு பாரம்பரியமிக்க வைரவேலுடன் நகரத்தார் 291 சர்க்கரை காவடிகள், ஆயிரக்கணக்கான முருக பக்தர்களுடன் குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு வந்தடைந்தனர்.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் பழநி கோயில் தைப்பூசம் விழாவின்போது 400 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழநி சென்று முருகனை தரிசித்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். பாத யாத்திரையின் போது பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் வெள்ளை வேட்டி அணிந்து செல்கின்றனர். கோயில் சென்று மீண்டும் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.காலம் மாறினாலும் 400 ஆண்டுகளாக தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது பயணங்களை தொடர்கின்றனர்.
தை பூசத்தன்று பழநி சென்றடைந்து அதன் பின் பிப். 6 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.இக்குழுவினர் நேற்று வாணியர் காவடி மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்கப்பட்டது. பானக பூஜையும் நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாட காவடிகள் கோபால்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல் வழியாக காவடி ஆட்டத்துடன் பழநியை நோக்கி புறப்பட்டனர். பொதுமக்கள் ,முருக பக்தர்களால் வழி நெடுகிலும்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.இன்று காலை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காவடி தங்கலும் ரெட்டியார் சத்திரத்தில் காவடி நைவேத்தியம் நடக்கிறது. செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.