தை மாத வளர்பிறை (சுக்ல பட்சத்தில்) வரும் ஏகாதசி திதியானது பவித்ரோபனா என்கின்ற புத்ரதா ஏகாசதியாகும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்கியம் தந்து வம்சாவளி பெருக்கும். செல்வங்கள் பல இருந்தாலும், வம்சம் தழைக்க குழந்தை செல்வம் இல்லையென்றால், மற்றது அனைத்தும் இருந்தும் பயனில்லை என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஏகாதசி மஹாத்மயத்தில் இந்த ஏகாதசியின் மகிமைகளைக் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரனிடம் கூறுகிறார்.
துவாபர யுகத்தில் மஹிமதிபூரி என்ற பத்ராவதி பட்டணத்தை ஆண்டுகொண்டிருந்த மஹிஜித் மன்னருக்கு அனைத்து செல்வங்களும் நிறைந்து இருந்தாலும் அவர் சாம்ராஜ்யத்தை ஆளுவதற்கு குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக மகப்பேறு இன்றி மிகவும் வருந்திய மன்னர் ஒருமுறை வேட்டையாடுவதற்காக, கானகம் சென்றபோது அங்குள்ள ஒரு நதிக்கரையில் சில முனிவர்கள் இருப்பதைக் கண்டார். அவர்களிடம் சென்ற மன்னர் அவர்கள் யார் என்று கேட்டு, தன் மனக்குறையை தீர்க்குமாறு வேண்டி நின்றார். அதற்கு முனிவர்கள்.. நாங்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இன்று ஸ்ரவணமாதமான தை மாத வளர்பிறை புத்திரதா ஏகாதசி திதி ஆகும். காக்கும் கடவுளான பகவான் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணாவதாரத்தை போற்றி விரதமிருந்து வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி புத்திர பேறு உண்டாகும் என்று எடுத்துரைத்தனர்.
அதைக் கேட்ட மன்னரும் அன்று அவர்களுடன் அந்நதியில் நீராடி, அன்று முழுவதும் ஒன்றும் உண்ணாமல் உபவாசமிருந்து பகவான் ஸ்ரீமந் நாராயண நாமாவைத் தியானம் செய்து மறுநாள் துவாதசியன்று சில கனிகளை உண்டு உபவாசத்தை முடித்து நகருக்குத் திரும்பினான். சில நாட்களில் அவன் மனைவி கருத்தரித்து ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். இதனால் அதிக மகிழ்ச்சி அடைந்த மன்னம் பலவித தானங்களைச் செய்து தன் நாட்டு மக்களையும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார்.