பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
ஆலாந்துறை: ஆலாந்துறையில் உள்ள ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
ஆலாந்துறை, நெய்யல் ஆற்றின் அருகில் ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜனவரி 30ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தம் மற்றும் மண் எடுத்தல், முளைப்பாரி அழைத்து வருதல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 31ம் தேதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, மங்கல இசை வழிபாடு உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று அதிகாலை, 3:30 மணிக்கு, மங்கல இசை வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, மூலஸ்தான தெய்வங்களுக்கு மூலமந்திர பாராயணம், மகாபூர்ணாகுதி நடந்தது. காலை, 9:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது.காலை, 9:35 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கும், ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி, விநாயகர், வீரமாஸ்தி அம்மனுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, வேட்டைக்கார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.