பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
அவிநாசி: அவிநாசி ஒன்றியம் தொரவலூர் ஊராட்சிக்குட்பட்ட வாரணவாசி பாளையம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக 27ம் தேதி மங்கள இசை, கணபதி, மகாலட்சுமி,நவகிரக ஹோமம் உள்ளிட்டவைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வருதல்,காப்பு கட்டுதல் என முதல் கால யாக வேள்வி பூஜைகளும், அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி, திரவியாகுதி,லலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது .இதனையடுத்து நான்காம் கால யாக வேள்வியில் நாடி சந்தனம், கலசத்திற்கு உயிர் ஊட்டுதல் தீபாரதனையுடன் யாகசாலையில் இருந்து கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து, அபிஷேகபுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வர கோவில் சண்முக சிவாச்சாரியார் தலைமையில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹாபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தசதரிசனம், மஹா தீபாரதனையுடன் விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் கலைக்குழுவின் ஸ்ரீ சக்தி பண்பாட்டு மையம் சார்பில் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் மற்றும் கொங்கு பண்பாட்டு மையத்தின் கொங்கு பெருஞ்சலங்கையாட்டமும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நந்தி தங்கவேல், மிதுன் ராம் பழனிச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.