பதிவு செய்த நாள்
02
பிப்
2023
12:02
பல்லடம்: பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட சிவன் மற்றும் விநாயகர் கோவில்களில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
பல்லடம் அடுத்த கேப்டன் ஊர் மாரியம்மன் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, ஜன., 30 அன்று விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், நவகிரக ஹோமம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 6.00 மணிக்கு கோ பூஜை, மூல மந்திர ஹோமம் ஆகியவற்றை தொடர்ந்து, கலச தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு, 8.45 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. கேத்தனூர் சிவாச்சாரியார்கள் கணேச பாரதி, சண்முகம், குரு சுதாகரன், சிவபாலன் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுத்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் அருள்பாலித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், பல்லடம் அடுத்த, அம்மாபாளையம் ஆதி விநாயகர், மாகாளியம்மன், மற்றும் கன்னிமார் கருப்பராயர் தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜன.,30 முளைப்பாலிகை ஊர்வலத்துடன் விழா துவங்கியது. மறுநாள், முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி, கோபுர கலசங்கள் நிறுவுதல், பேரொளி வழிபாடு உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை 9.00 மணிக்கு, விநாயகர், கன்னிமார், கருப்பராயர் மற்றும் மாகாளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. ஓதிமலை சிவனேச அடிகளார் கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுத்து அருளாசி வழங்கினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.