பதிவு செய்த நாள்
03
பிப்
2023
11:29
சென்னை, சென்னை, பிராட்வே அடுத்த பூங்கா நகரில் வீற்றிருக்கும் கந்தகோட்டம் - கந்தசுவாமி கோவில் எனும் முத்துக்குமாரசுவாமி கோவில், மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு ஆண்டுதோறும், தை மாதம் பெருந்திருவிழா நடக்கும்.
இந்தாண்டு திருவிழா, ஜன., 27ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்தினம், வீரபாகு மகோற்சவம், தொட்டி உற்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில், இரட்டை தலை சிம்மம், புருஷா மிருகம், மேஷம், தேவேந்திர மயில், தங்க முலாம் யானை உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட, 35 அடி உயர பிரமாண்ட தேரில், வண்ண மலர் அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளினர். பக்தர்கள், பய பக்தியோடு சுவாமியை தரிசித்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அரோகரா... முழக்கத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் நிலையை அடைந்தது. பிப்., 28 வரை நடைபெறும் இவ்விழாவில், 9ல், தெய்வானை திருக்கல்யாணம், 11ல் வள்ளியம்மை திருக்கல்யாணம் நடக்கிறது. பிப்., 10ல், ராயபுரத்தில், உற்சவர் வெள்ளியங்கிரி விமானத்தில் எழுந்தருளுதல், வேடர்பறி உற்சவம் நடக்கஉள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, அறநிலையத் துறை இணை கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.