பதிவு செய்த நாள்
04
பிப்
2023
09:02
பழநி: பழநியில் ஜன.29 அன்று கோலாகலமாக தைப்பூசத் திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் பழநியில் குவிந்தனர்.
பழநி தைப்பூச திருவிழாவில் நேற்று (பிப்.3) பெரிய நாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவின் ஜன.29ல் கொடி ஏற்றப்பட்டது. தினமும் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சப்பரம், ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழா உற்சவத்தில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆறாம் நாளான நேற்று (பிப்.3ல்) இரவு 7:36 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெள்ளி ரத வீதி உலா நடைபெற்றது. இதில் கோயில் இணைஆணையர் நடராஜன், திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று (பிப்.4.,) அதிகாலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்று. 12:00 மணிக்குள் பெரியநாயகி அம்மன் கோயில், சுவாமி திருத்தேரில் எழுந்தருளி மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வரும். பிப்.7 ல் மாலை 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும். இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு பெறும்.
திரண்ட பக்தர்கள்: பழநி தைப்பூசத் திருவிழாவில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறினர். பழநியில் ஜன.29 அன்று கோலாகலமாக தைப்பூசத் திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வருகை புரிந்தனர். பழநி பகுதியில் சாரல் மழை பெய்ததால் ஆங்காங்கே பக்தர்கள் தேங்கினர். சாரை சாரையாக வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் அன்னதானங்கள், குளிர்பானங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. பல இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டது. நடமாடும் மருத்துவமனைகள் இருசக்கர வாகன மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் பக்தர்கள் தங்க, நிரந்தர மற்றும் தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு 3000 போலீசார் பாதுகாப்பு பணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகதினர் பக்தர்கள் இடையூறு இன்றி, மலைக்கோயில் செல்ல வடக்கு கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக யானை பாதையை அடைந்து மலைக்கோயில் செல்லவும், மலைக்கோயில் இருந்து படிப்பாதை வழியாக பாத விநாயகர் கோயிலை அடையவும் ஒரு வழி பாதையாக அனுமதித்தது.
பழநியில் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்லாமல் பழநி பஸ் ஸ்டாண்ட் வந்ததால் நெரிசல் அதிகரித்தது. பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக அளவில் பெற்று பயண சீட்டு வழங்கப்பட்டது. சண்முகநதி அருகே முறையின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. சண்முக நதியில் குளிக்க வரும் பக்தர்களிடம் சில நபர்கள் கட்டணம் வசூலித்தனர். அன்னதானம் வழங்கும் நபர்கள் சாலை ஓரத்தில் வழங்கியதால் பக்தர்கள் சாலையில் வரிசையில் நின்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. கிரிவீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்தூர் ரோடு, பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நெரிசல் அதிக அளவில் இருந்தது.