பதிவு செய்த நாள்
05
பிப்
2023
09:02
முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில், சுவாமி முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். தைப்பூச திருவிழாவையொட்டி, இந்த ஆண்டு முருகன் கோவில்களில் அதிகாலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மொட்டை போட்டும், அலகு குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.
முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்: முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர். கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.