காளஹஸ்தி சிவன் கோயிலில் திரிசூல ஸ்நானம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 03:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று 5ம் தேதிஞாயிற்றுக்கிழமை அன்று திரிசூல ஸ்நானம் (சத்வோ முக்த விரதம்) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .ஸ்ரீ காளஹஸ்திக்கு மற்றொரு பெயர் சத்வே முக்தி ஷேத்திரம் நினைத்த உடனே முக்தி கிடைக்கும் திவ்ய்க்ஷேத்திரம் ஸ்ரீகாளஹஸ்தி என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவன் கோயில் சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பௌர்ணமி அன்று சிறிய பிரம்மோற்சவம் என்றும் திரிசூல ஸ்நானம் என்றும் சாஸ்திர( ஆகமவிதிப்படி )பூர்வமாக நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று சொர்ணமுகி ஆற்றிற்கு புஷ்கர உற்சவம் என்றும் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள் விநாயகர், வள்ளி தேவயானி சமேத சுப்பிரமணிய சுவாமி, ஞானப் பிரசுனாம்பிகா சமேத ஶ்ரீ காளஹஸ்திஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரரை சிவன் கோயிலில் இருந்து சொர்ணமுகி ஆற்று வரை மங்கள வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர் .இங்கு கோயில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சங்கல்ப பூஜைகளில் தொடங்கி யாகசாலையை ஏற்பாடுச் செய்து திரிசூலத்தில் வீற்றிருக்கும் (உமாதேவி சமேத சந்திரசேகர சுவாமி) திரிசூலத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கோயில் வேதப் பண்டிதர்கள் சத்வோ முக்தி விரதப் பூஜையின் சிறப்பை பக்தர்களுக்கு விவரித்தார்கள். தொடர்ந்து திரிசூலத்தை கோயில் அர்ச்சகர்கள் சொர்ணமுகி ஆற்றின் அருகில் கொண்டு வந்தனர். "ஓம் நமச்சிவாய" "ஹர ஹர மகாதேவா" என்று பக்தர்கள் எழுப்பிய சிவ நாம முழக்கங்கள் இடையே திரிசூல ஸ்நானத்தை ஆகம சாஸ்திர பூர்வமாக நடத்தினர் .தொடர்ந்து உற்சவமூர்த்தி களுக்கு தீப தூப நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர் .இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடினர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி ஆர்டிஓ டிராமா ராவ் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிசூல ஸ்நானம் செய்தனர். தொடர்ந்து நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ,சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை, மூஷிக வாகனத்தில் விநாயகர், (மயூர) மயில் வாகனத்தில் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.