சூலூர் வட்டாரத்தில் தைப்பூச தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 08:02
கருமத்தம்பட்டி: தைப்பூசத்தை ஒட்டி, சூலூர், சுல்தான்பேட்டை வட்டார முருகன் கோவில்களில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், நேற்று காலை முருகப்பெருமான் தேருக்கு எழுந்தருளினார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தியும், பால் குடம், பன்னீர் குடம் ஏந்தியும் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதோபோல், சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். க.ராயர்பாளையம் பாலமுருகன் கோவிலில், முருகனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டம் நடந்தது. பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நடந்த தைப்பூச பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கண்ணம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைக்குப் பின், விபூதி அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.