பதிவு செய்த நாள்
07
பிப்
2023
08:02
காஞ்சிபுரம், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஐந்தாம் நாள் உற்சவமான, ஜன., 31ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்.,2ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 5ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.
10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு, 20 ஊர் சுவாமிகள் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசையாக நடந்தது.இதில், செய்யாற்றை சுற்றியுள்ள, பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், வெங்கடாவரம், கீழ்நேத்தப்பாக்கம், மேல்தண்டரை, மடிப்பாக்கம், தேத்துறை, கீழ்நீர்குன்றம், உக்கல், வெள்ளாமலை, சேத்துப்பட்டு, இளநீர்குன்றம், இளநகர், மேல்பாக்கம், விசூர், கூழமந்தல், மானாம்பதி கூட்ரோடு, அத்தி, மகாஜனம்பாக்கம் ஆகிய 20 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் சங்கமித்தனர். அங்கு 20 ஊர் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி, பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர். பின், அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது. ஆற்று பகுதிக்குள் நிலவிய கடுமையான பனிப்பொழிவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் செய்யாற்றில் நடைபெறும் தைப்பூச ஆற்றுதிருவிழாவில், 20 ஊரை சேர்ந்த சுவாமிகள் சங்கமிப்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் திருவிழா நடக்கும் செய்யாற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், நேற்று முன்தினம் நடந்த விழாவில், போதுமான போலீஸ் பாதுகாப்பு போடவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.