பதிவு செய்த நாள்
07
பிப்
2023
08:02
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி மற்றும் சேவூர் ஊராட்சியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நிலா பிள்ளையார் வைத்து கும்மியடித்து, குழந்தைகள்,பெண்கள், ஆண்கள் வழிபட்டனர். முருகக் கடவுள் சூரபத்மனை அழிக்க வேல் வாங்கிய விழாவாக தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு 9ம்நாள், 7ம்நாள், 5ம்நாள் என வசதிக்கேற்ப முன்னதாக தினமும் பிள்ளையார் பிடித்து விரதம் இருந்து ஊர் பொது இடத்தில் கும்மியடித்து ஆடுவார்கள். மேலும், தங்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் பதார்த்தங்களை பிள்ளையாருக்கு படைத்து வழிபடுவார்கள். நேற்று தைப்பூச திருவிழாவான 9ம் நாளை முன்னிட்டு நீர், நிலம், மண் உள்ளிட்ட வளங்கள் காக்க பாரம்பரியமாக தமிழர்கள் கொண்டாடும் நிலா பிள்ளையார் கும்மியடி திருவிழா,அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர்.
சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சந்தை பாளையத்தில் நிலாச்சோறு படைத்தல் நிகழ்ச்சி தமிழர் பண்பாட்டு பேரவை சார்பில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தலைவர் நடராஜன், செயலாளர் வெங்கடாசலம், சேவூர் கிளை நடராஜ், வெங்கடாசலம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கண்ணன், நாகராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 30ம் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து பாடல்கள் பாடி ஆடினர். இனிப்பு, காரம் ஆகிய பலகாரங்கள் நிலாவிற்கு படையல் செய்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.