பதிவு செய்த நாள்
07
பிப்
2023
08:02
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. தைப்பூச உற்சவ நாளில், உற்சவர் சந்திரசேகரர், திரிபுரசுந்தரி அம்பாளுடன், சங்குதீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் காண்பார். இந்நாளான நேற்று முன்தினம், பகலில், உற்சவர் சந்திரசேகரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, இரவு, அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, கோவிலிலிருந்து புறப்பட்டு, சங்குதீர்த்த குளத்தை அடைந்தனர். இரவு 8:00 மணிக்கு, அலங்கார தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமியர், மூன்று சுற்றுகள் வலம் வந்தனர். பக்தர்கள் குளத்தின் படிகளில் கூடி தீபமேற்றி, தரிசித்து வழிபட்டனர். தெப்ப உற்சவத்தைத் தொடர்ந்து, சுவாமியர் மாடவீதிகளில் உலா சென்றனர். அதன்பின், இரவு 11:30 மணிக்கு கோவிலை அடைந்தனர்.