பதிவு செய்த நாள்
07
பிப்
2023
11:02
தொண்டாமுத்தூர்: ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா நேற்றுமுன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருவிழாவையொட்டி, கள்ளிப்பாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப்பாரிகளை ஏந்தி, பாதயாத்திரையாக வந்து லிங்கபைரவியை தரிசனம் செய்தனர். இந்த பாத யாத்திரையில், சுற்றுவட்டார கிராம மக்களும், வெளியூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஜாதி, மத பாகுபாடுயின்றி கலந்து கொண்டனர். இந்த யாத்திரையில், ஆண்கள் கரகம் எடுத்து வர, அதனைத்தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்ட தேர், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த தேருக்கு, ஆலாந்துறை மத்வராயபுரம், இருட்டுபள்ளம், செம்மேடு, முட்டத்துவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அதோடு, தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், கடந்த 21 நாட்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர். அனைவரும் நேற்றுமுன்தினம் லிங்கபைரவிக்கு தேங்காய், தானியங்கள், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.