பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூச விழா நடந்தது. எமதர்மன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இங்கு சிவபெருமானை பூஜித்து, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் பைரவரை வணங்கி மீண்டும் தனது பதவியை பெற்றார். இத்தலத்தில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை 6:00 மணிக்கு திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதி வலம் வந்தார். அப்போது பொதுமக்கள் வீடுகள் தோறும் தேங்காய் உடைத்து சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பொன்னால் பூண்முலையம்மன் சமேத ஸ்ரீ எமனேஸ்வரமுடையவர் கோயில் இனாம் பரம்பரை டிரஷ்டிகள் மற்றும் சிவன் சேவா குழுவினர் செய்திருந்தனர்.