பதிவு செய்த நாள்
10
பிப்
2023
03:02
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
சென்னைக்கு மேற்கே, வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். 1890ம் ஆண்டு மிக எளிமையாக இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. கடந்த 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம் செய்யப்பட்டு, ஆகம விதிகளின்படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டன.
இதையடுத்து, கடந்தாண்டு ஜன., 23ம் தேதி ஜீர்ணோதார்ண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை வளர்க்கப்பட்டு, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆச்சார்யார் ரக்ஷா பந்தனம், 108 எண்ணிக்கைகள் கொண்ட அஷ்டோத்திர சத 108 கலாபிஷேகம் நடந்தது. பின், முதல் கால பூஜைகள், வேதபாராயணம், விசேஷ திரவிய ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்வில் வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் ஆதிமூலம், தினமலர் நாளிதழ் இணை நிர்வாக இயக்குனர் லட்சுமிபதி, தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பு வெளியீட்டாளர் ராமசுப்பு, ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின் ஓராண்டு நிறைவு நாளான இன்று காலை 6:15 மணி மதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத, திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடக்கிறது. பின், மஹா பூர்ணாஹுதி, யாத்ராதான எஜமான சங்கல்பம், மஹா தீபாராதனை, கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம், வடபழநி ஆண்டவருக்கு 108 எண்ணிக்கைகள் கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது.