ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா, கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் நாள் மாலை, கிராம தேவதைக்கு பூஜை, கணபதி பூஜை ஆகிய நிகழ்வுகள் நடந்தன. அன்று இரவு, மூஷிக வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று, காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி தலைமையிலான உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.